பிரதமர் மோடியை நையாண்டி செய்யும் புத்தகத்துக்கு தடை விதிக்க குஜராத் ஐகோர்ட் மறுப்பு

இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்னர் குஜராத் முதல் மந்திரியாக இருந்த நரேந்திர மோடி, 2014-பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பா.ஜ.க.வுக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்தார். அப்போது பல்வேறு வாக்குறுதிகளை பா.ஜ.க. அரசு நிறைவேற்றும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைத்து இரண்டாண்டுகள் ஆகியும் தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய பிரதமர் நரேந்திர மோடியின் அரசியலை நையாண்டி செய்து காங்கிரஸ் கட்சி பிரமுகரான ஜெயேஷ் ஷா என்பவர் ‘ஃபெக்குஜி ஹவே டில்லி மா’ (பொய் வாக்குறுதி அளித்தவர் டெல்லியில் உள்ளார்) என்ற பெயரில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குஜராத்தி மொழியில் வெளியாகியுள்ள இந்த புத்தகம் பிரதமர் மோடியின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளதாகவும், இந்த புத்தக விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலரான நரசின்ஹ் சோலாங்கி என்பவர் குஜராத் மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட் நீதிபதி ஏ.எம். தவே, மேற்படி புத்தகத்துக்கு தடை விதிக்க முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

ஜனநாயக நாடான இந்தியாவில் தங்களது கருத்துகளை புத்தகத்தின் வாயிலாக தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு என தனது தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி, அப்படி தடை விதிப்பது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் இந்நாட்டு மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கருத்து சுதந்திர உரிமையை மீறுவதாக அமைந்துவிடும் எனவும் எச்சரித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்