கடலரிப்பால் பாழாகும் வரலாற்றுப் புகழ் மிக்க அல்லிராணிக் கோட்டை (Photos)

அல்லிராணிக் கோட்டை , மன்னார்த் தீவுக்கு 10 மைல்கள் தெற்கேயுள்ள ” அரிப்பு ” என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு கோட்டை. இதன் அமைவிடம் வரண்ட தரிசு நிலப்பகுதியாக அமைந்துள்ளது. இந்தக் கோட்டை முதன் முதலில் போத்துக்கீசரால் கட்டப்பட்டது.

1658ல் ஒல்லாந்தர் இதனைக் கைப்பற்றித் திருத்தி அமைத்தனர்.

அரிப்புக் கோட்டை ஏறத்தாழச் சதுர வடிவமானது. இதன் பக்கங்கள் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளை நேராக நோக்கியிருக்கும்படி அமைந்துள்ளன.

கோட்டையின் வடமேற்கு மூலையிலும், தென்கிழக்கு மூலையிலும் இரண்டு கொத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் உட்புறம் கோட்டையின் வடக்குச் சுவரையும், கிழக்குச் சுவரையும் அண்டி வீரர்கள் தங்குவதற்கான அறையும், வேறு சிறிய அறைகளும் காணப்படுகின்றன. தெற்குப்புறச் சுவரில் கோட்டை வாசல் உள்ளது.

இந்த நிலையில் அல்லிராணிக்கோட்டை பராமரிப்பின்றியும், கடலரிப்பாலும் அழியும் நிலையில் காணப்படுவதாகக் கவலை தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் விதத்தில் அமைந்ததுமான கிராமங்களுள் அரிப்புக் கிராமமும் ஒன்று. இந்த அரிப்புக் கிராமத்தில் பழமை வாய்ந்த அல்லிராணிக் கோட்டை காணப்படுகிறது.

கடந்த யுத்த காலத்தின் போது இந்தப் பிரதேசத்துக்குச் செல்ல முடியாத நிலை காணப்பட்டது. இதனால் அல்லிராணிக் கோட்டை என்ற பெயரை மட்டும் தான் மக்கள் கேட்டிருப்பார்களே தவிர அதனைப் பார்க்க முடியாத நிலையில் இருந்தனர்.

யுத்தம் ஓய்ந்த பின்னர் தற்போது அதனைப் பார்வையிடுவதற்கான சூழ்நிலை தோன்றியுள்ளது.

இத்தகைய பெருமை வாய்ந்ததும் சிறந்த சுற்றுலாத்தலமாகத் திகழ்வதுமான அல்லிராணிக்கோட்டை தற்போது கடலரிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் காணப்படுகின்றது.

இதனைப் பார்ப்பதற்கு மிகவும் வேதனையளிப்பதாகப் பலரும் கூறுகின்றனர். இந்தக் கோட்டை தொடர்ந்தும் சிதைந்து வருவதுடன் கடலரிப்பாலும் பெரும் அபாயத்தை எதிர்கொள்கிறது. ஆனால் இந்த நிலையிலும் இதனைப் பார்வையிடுவதற்கு நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

மன்னார் மாவட்டத்தின் பெருமையையும் சரித்திர சிறப்புக்களையும் காட்டி நிற்கும் இந்த அல்லிராணிக் கோட்டையைப் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டியது உரியவர்களின் தலையாய பணியாகும். இதனையே மன்னார் மக்கள் எதிர் பார்க்கின்றனர்.

தமிழ் சி.என்.என் இன் மன்னார் சிறப்புச் செய்தியாளர்-

alli4

alli

alli2

alli3

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்